இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை திறக்க இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA) கையெழுத்தானது.

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் உடனான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) 18.2.2022 அன்று கையெழுத்தானது. ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் இடையே இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

கடந்த 7 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இதன்மூலம் இந்திய நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வர்த்தகச் சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சிறப்பான வழியை உருவாக்க முடியும்.

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம், இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளின் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம் என்று ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு வணிகங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள் மற்றும் பாதணிகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் போன்ற உழைப்பு சார்புமிகுந்த தொழில்கள் அதிகப் பயன்பெறும் தொழில்களில் முக்கியமானதாக இருக்கும்.

விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA) ஒரு சமநிலையான, நியாயமான, விரிவான மற்றும் சமமான கூட்டு ஒப்பந்தம், இது இந்தியாவிற்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிலும் மேம்பட்ட சந்தை வசதியை வழங்கும்.

இந்த ஒப்பந்தம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். புதிய தொழில் நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை வழங்கும், இதன் மூலம் வர்த்தகப்போட்டியும், பொருளாதார வளர்ச்சியும் உத்வேகம் பெற வழிவகை ஏற்படும்.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 88 நாட்களில் கையெழுத்தாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மே மாத தொடக்கத்தில் அதாவது 90 நாட்களுக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

ஒப்பந்தத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% தயாரிப்புப் பொருட்களும், 80% வர்த்தகம் பூஜ்ஜிய வரியை ஈர்க்கும். மீதமுள்ள 20% நமது ஏற்றுமதியை அதிகம் பாதிக்காது என்பதால், இது ஒரு வெற்றி ஒப்பந்தம்” என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்துக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துத் செய்தியில், “வளைகுடா நாட்டின் முதலீடு ஜம்மு காஷ்மீர் வரை செல்லட்டும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான புதிய நிதிஉறவை உருவாக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 6000 கோடி டாலரிலிருந்து 10ஆயிரம் கோடி டாலராக உயரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.