கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் கொள்கை திட்டம் வகுக்காதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம், கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், எல்.என்.ராவ், ரவீந்திரப்பட் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று (31-5-2021) விசாரணைக்கு வந்த போது பேசிய நீதிபதிகள், “2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் என்று ஒன்றிய அமைச்சர்கள் தெரிவிக்கும் நிலையில், தடுப்பூசி விலை நிர்ணயம், பற்றாக்குறை, கிராமப்புற தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் போன்ற தடைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினர்.

தடுப்பூசிக்கு விலையை நிர்ணயம் செய்ய அதிகாரம் கொண்டுள்ள ஒன்றிய அரசு, தனக்கொரு விலையையும், மாநில அரசுக்கு ஒரு விலையையும் நிர்ணயம் செய்ய அனுமதித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில அரசுகள் ஏன் கூடுதலாக விலை தர வேண்டும்.

முழு நாட்டிற்கும் தடுப்பூசி ஒரே விலை என்ற பொறுப்பை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசிக்கான விலையை நிர்ணயம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.

மாநில அரசுகளுக்கு தடுப்பூசியை நேரடியாக வழங்க சர்வதேச நிறுவனங்கள் மறுத்துவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தை மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு விட்டுவிடப் போகிறதா? என்று வினவினர்.

டிஜிட்டல் இந்தியா என்று முழங்கி வரும் ஒன்றிய அரசு, களத்தில் உள்ள எதார்த்த நிலையை அறியவில்லை என்றும், தடுப்பூசி செலுத்த கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கோரும் நிலையில், ஒரு கிராமத்தில் அலைபேசி வசதி இன்றி இருக்கும் ஒருவருக்கு இது எப்படி சாத்தியம் என்பதை அரசு யோசித்திருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதுவரை 21 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தாலும், இந்திய மக்கள் தொகையில் அது வெறும் 11% மட்டுமே என்ற நிபுணர்களின் கருத்தை மேற்கோள்காட்டி, அதிலும் வெறும் 3% மக்களுக்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறினர்.

கொரோனா 3வது அலையில் இருந்து தப்ப வேண்டும் என்றால் தடுப்பூசி விநியோகத்தை போர்க்கால அடிப்படையில் அதிகப்படுத்த வேண்டும் என்ற மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

மேலும் பல மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம் தான் இந்தியா என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அப்படியிருக்கும் போது கூட்டாட்சி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்றிய அரசு தான் தடுப்பூசியை வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

உடனே ஒரு தடுப்புசிக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும். அதனை மாநிலங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது பதிலளித்த சோலிசிட்டர் ஜெனரல் பைசர் உள்ளிட்ட அனைத்து தடுப்பூசி நிறுவனங்களிடமும் பேசி வருவதாகவும், இப்போது உறுதியாக எதனையும் தெரிவிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடரில் CAA அமல்படுத்தும் பாஜக அரசு; குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்