பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்த கேள்விக்கு, தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன் என்று இளையராஜா பதிலளித்துள்ளார்.

பொள்ளாச்சி கொடூர பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகளும், பொது மக்களும் மற்றும் பல அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் 75- வது பிறந்த நாள் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக இளையராஜா தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேற்று சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொண்டு, மாணவிகள் கேட்ட பாடலைப் பாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இளையராஜாவிடம் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த இளையராஜா, “தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் இது போல் இன்னொன்று நடக்கக் கூடாது என்கிறார்கள். அது தான் எனது உணர்வும். இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடக்க வேண்டும்” என்றார்.