தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57.

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருகவைக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு.. போன்றவற்றிலும் பங்களித்துள்ளார்.

நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மயில்சாமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு இன்று சென்று வரும் வழியில் நெஞ்சு வலிக்கிறது என்று அருகில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், மயில்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மயில்சாமியின் திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.