தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகள் நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நெடுஞ்சாலைகளில் சிலைகளை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால், சிலையை அகற்றியதில் தவறில்லை” என்று கூறினார். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொது சாலைகள், மேய்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலைகளை அகற்றி, பூங்கா போன்ற இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக குற்றம் சாட்டி, தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது.

மேலும், சிலைகள் தாக்கப்பட்டு சட்ட ஒழுங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாள் நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது அதை அவர்கள் கற்பிக்கவில்லை என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் சிலைகள் பராமரிக்கப்படுவதில்லை என்றும் சிலைகள் சேதப்படுத்தப்படுத்துதல், அவமரியாதை செய்தல் போன்ற செயல்களால் வன்முறை வெடிப்பதாகவும் இதை அனுமதிக்க கூடாது என அறிவுத்தினார்.

பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தை போக்க முடியாது என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.