கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே சென்றது.. என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா நெருக்கடி இன்னும் தீராத நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மோடி அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மோடி ஆட்சியில் ஜிடிபி என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்ல. பெட்ரோல், டீசல், கேஸ் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக ஆட்சியில் ஜிடிபி உயர்ந்து வருவதாக பிரதமர் மோடியும், ஒன்றிய நிதியமைச்சரும் கூறிவருகின்றனர். அவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஜிடிபி என்று குறிப்பிடுகிறார்கள் என்று கருதினேன்.

ஆனால் ஜிடிபி உயர்வு என்று பிரதமரும், நிதியமைச்சரும் கூறுவது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு என்பது பின்னர்தான் புரிந்தது என்று கடுமையாக சாடி உள்ளார்.

மேலும், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே சென்றது.. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014க்குப் பிறகு பெட்ரோல் 42%, டீசல் 55% உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? ஒருபக்கம் பணமதிப்பிழப்பையும், மறுபக்கம் பணமாக்குதல் திட்டத்தையும் அறிவிக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் நான்கைந்து நண்பர்களுக்கே பலன் அளிக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ளனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஒன்றிய பாஜக அரசு இதுவரை என்ன முன்னேற்றத்தை கண்டுள்ளது?

எரிபொருள் விலை உயர்வுக்கு தற்போதைய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். 1991 போன்று 2021 ஆம் ஆண்டு கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

அதேபோல் இந்த விலையேற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உத்தர பிரதேச கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பிரதமரே நாட்டில் இரண்டு வகையான வளர்ச்சி மட்டுமே உங்கள் ஆட்சியில் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஒன்று உங்களது கோடீஸ்வர நண்பர்களின் வருமானம்,

மற்றொன்று சாமானிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி. இதுதான் உங்களுக்கு வளர்ச்சி என்று பொருள்பட்டால் அந்த வளர்ச்சியை விடுப்பில் அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.900 கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை; 2 வாரங்களில் 2 முறை உயர்வு