இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி கடந்த சில வாரங்களில் உத்தரப் பிரதேசத்திற்கு தொடர்ச்சியாக சென்று, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

அதேபோல் சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மெல்லச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஒரு வழக்கில் பிணை வழங்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சேகர் குமார் யாதவ் முன்னிலையில் நேற்று (23.12.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசும்போது, “ஒமைக்ரான் பரவலால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலையை எதிர்கொள்வோமா என்ற அச்சம் இருக்கிறது.

2-வது அலையில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர், பலர் கொரோனாவால் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் நடந்த கிராமபஞ்சாயத்து தேர்தல், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் கொரோனா தொற்று அதிகரித்தது. தொற்று அதிகரிக்க இந்த இரு தேர்தல்களும் காரணாக இருந்தன.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அப்போது தேர்தல் பிரச்சாரங்கள், அரசியல்கட்சிக் கூட்டங்கள், பேரணிகள் நடக்கும். இதனால், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆதலால் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள் நடத்த தடைவிதித்து, வானொலி, தொலைக்காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நிறுத்த தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்துவதாக இருந்தால், அதை 2 மாதங்கள் ஒத்திவைக்கலாம். உயிர் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலை தள்ளி வைக்கலாம் என தேர்தல் ஆணையத்திற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி.