வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஜாமீன் கோரிய வழக்கை விசாரணை செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், “தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், பிறகு தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

ஆனால், என் மீது புகார் அளித்தவர்கள் தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் மனுவில் இருவரும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இந்த மனு முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கும் ஜாமின் வழங்க கூடாது என புகார்தாரரான விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 23) மீண்டும் நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், மீரா மிதுன் மீது ஏற்கனவே 5 வழக்குப் பதியப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், பட்டியலின் மக்களை புண்படுத்தும் வகையில் பேசி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் எல்லா வகையிலும் மீரா மிதுனின் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், மீரா மிதுனின் வீடியோக்களை படம் பிடிப்பதும் பதிவேற்றம் செய்வதும் அவர் தான் எனவும்,

இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். அதேபோல் புகார்தாரரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு சார்பிலும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி செல்வகுமார், புலன் விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாலும், சிறையில் அடைத்து மிகக்குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது என கூறி இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு: கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் மீரா மிதுன்