புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விபத்து குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்தி வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட புதுக்கோட்டை தேவஸ்தானஸ்துக்கு சொந்தமான பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாட கோவில் நிர்வாகம் முடிவு செய்து, கடந்த 23 ஆம் தேதி ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடங்கிய நாள் முதல் தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் 9 ஆம் நாளான நேற்று (31.07.2022) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 8.50 மணிக்கு நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெறுவதால் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தயாராக இருந்தனர்.

இதனையடுத்து தேர் நிலையத்தில் இருந்து 2 அடி நகர்ந்திருந்த நிலையில், தேர் ஒருபக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது. தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில், தேரின் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த 5 பெண்கள் உள்பட 8 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

பின்னர் காயம் அடைந்த அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக கோயில் ஊழியர்கள் ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள், சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அனிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா, “கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோயிலின் தேர் ஓடவில்லை. தேர் சரிசெய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. தேரில் அதிகப்படியான கூட்டத்தின் காரணமாக பிடிமானம் இல்லாததால், தேர் சரிந்துவிட்டது. மேலும் தொழில்நுட்ப ரீதியாக என்ன கோளாறு என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

தேருக்கு பொதுப்பணித்துறையிடம் முறையாகச் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் வாங்காமல், அனுமதிக்க மாட்டோம். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்துள்ளது.. இன்று தேர் சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து முறையாக துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டைதேர் விபத்து நடத்த இடத்தில் அமைச்சர் சேகர் பாபு இன்று (01.08.2022) நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.