கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் சிவசங்கர் (வயது 72). நடிகர்கள் விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராகவும்,

முன்னணி நடிகர்களுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் சிவசங்கர் மாஸ்டர் நடித்துள்ளார்.

800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகாதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன இயக்குனர் சிவசங்கர் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.