2008ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் நானா படேகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி நானா படேகர் தனுஸ்ரீ தத்தாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கெல்லாம் பயந்து போய் ஓடிவிட மாட்டேன் என்ற தனுஸ்ரீ தற்போது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் நானா படேகர், டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக்கி மற்றும் இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.

தனுஸ்ரீயின் குற்றச்சாட்டு குறித்து நானா படேகர் கூறும்போது, நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். பொய் என்பது பொய் தான். இந்த விவகாரம் தொடர்பாக நான் விரைவில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன் என்றார்.

தனுஸ்ரீ தத்தாவோ இது உண்மை என்றும், ஆதாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தத்தாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்ததற்கு ஆதாரம் இருப்பதாக நடிகை டாப்ஸியும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது குறித்து டாப்ஸி கூறியிருப்பதாவது, “சம்பவம் நடந்தபோதே பேசியிருக்க வேண்டியது தானே என்று நான் தனுஸ்ரீயிடம் கேட்க மாட்டேன். சம்பவம் நடந்திருக்கிறது. அது நடந்தது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அதனால் அவர் 10 ஆண்டுகள் கழித்தோ 40 ஆண்டுகள் கழித்தோ புகார் தெரிவிப்பது பெரிய விஷயம் இல்லை. இந்த சம்பவம் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் துணிச்சலாக பதில் அளித்து வருகிறார். அவர் செயலில் நேர்மை இருக்கிறது.

தனுஸ்ரீயை பார்த்து அவர் போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பேச வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பலர் என்னிடம் தெரிவித்தனர். நான் என் மனதில் பட்டதை கூறுகிறேன். என்னால் போலியாக இருக்க முடியாது. என் மனசாட்சியை கொன்று வாழ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனுஸ்ரீ தத்தா மீது நவநிர்மாண் தலைவர் சுமந்த் தாஸ் என்பவர் காஜி காவல் நிலையத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நடிகை தனுஸ்ரீ, நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது அவதூறு பரப்புவதாக கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியில், “மறைந்த பால்தாக்கரேயை தொடர்ந்து அவர் வகித்து வந்த சிவசேனா தலைவர் பதவியை பெற ராஜ்தாக்கரே விரும்பினார். ஆனால் அவரால் முடியவில்லை. 2008-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ன் ஓகே பிளீஸ்’ படத்தில் இருந்து விலக முடிவு செய்ததற்காக தன்னுடைய வாகனம் நொறுக்கப்பட்ட சம்பவத்தில் நவநிர்மாண் சேனா கட்சியினருக்கு தொடர்பு உள்ளது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு செய்திக்கு: திரைத்துறையில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் – விஷால் பட நடிகை ஆதங்கம்