இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, தனது வீட்டில் டிரெட்மில்லில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு, இதயக் குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு அடைப்பில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டது. மேலும் முதன்மை இதய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது.

கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரூபாலிபாசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மாரடைப்பு ஏற்பட்டுமதியம் 1 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பின்பு, dual anti-platelets மற்றும் statin சிகிச்சை முறை வழங்கப்பட்டது. இதயத் துடிப்பு நொடிக்கு 70 ஆகவும், இரத்த அழுத்தம் 130/80 என்ற வரம்பிலும் உள்ளன. அவர் உடல்நில தற்போது சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதய நிபுணர் சரோஜ் மொண்டோல் கூறும்போது, கங்குலியின் சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே சிறப்பு மருத்துவக் குழுவை உருவாக்கியுள்ளது. இரத்தத்தை விநியோகிக்கும் தமனிகளில் சில அடைப்புகள் இருந்தன. ஆஞ்சியோகிராஃபி செய்யப்படும். ஆஞ்சியோபிளாஸ்டி வழியாக சிகிச்சை மேற்கொள்ளப்படும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கங்குலி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கங்குலி நலமுடன் உள்ளார். நேரில் சந்தித்தேன், சிறிது நேரம் உரையாடினார்” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கங்குலியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும் அவரது மனைவியிடமும் பேசிய மோடி, எந்த உதவியையும் செய்ய தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்தில் இறங்கிய தோனி; துபாய்க்கு காய்கறி ஏற்றுமதி