கரோனா பாதிப்பின் எதிரொலியால் 2020 ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க உள்ளது. இதனால், இந்நிகழ்ச்சிக்கு உரிய கௌரவம் பறிபோய்விடும் என ஒலிம்பியா மேயர் கடிதம் எழுதி உள்ளார்.

2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் பாதிப்படைந்து இருக்கும் நிலையில், 2020 ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி எந்த சிக்கலும் இல்லாமல் நடக்குமா.. என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கிரீஸ் நாட்டிலும் கரோனா பாதிப்பு இருப்பதால் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து க்ரீக் ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி, பார்வையாளர்கள் இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட 100 சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டில் நடந்த லாஸ் வேகாஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போதும், ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. அதன் பின் இப்போது கரோனா வைரஸ் அச்சம் காரணமாக மீண்டும் அதேபோல் நடைபெற உள்ளது.

மார்ச் 11 அன்று ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மார்ச் 12 அன்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. பின் ஏழு நாள் கழித்து ஒலிம்பிக் ஜோதி மீண்டும் கிரீஸ் நாட்டை வந்தடையும். வழக்கமாக இந்நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள், இந்த முறை கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் இல்லாமல் நடைபெற உள்ளது. இது இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு உள்ள பெருமை மற்றும் கௌரவத்தை சிதைத்து விடும் என ஒலிம்பியா மேயர் கவலை தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் 73 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குழந்தைகள் இந்நிகழ்ச்சிக்கு வர இருந்தனர். அதையும் தற்போது ரத்து செய்துள்ளனர். அதனால், மே மாதத்திற்கு ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் ஒலிம்பியா மேயர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.