உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட உத்தரப் பிரதேச மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, அதிக அளவிலான இந்திய மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு முந்தைய அரசே காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.

ரஷ்யா- உக்ரைன் போர் இன்று 8-வது நாளை எட்டியுள்ளது .தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரம் கார்கிவ் என ஒவ்வொரு இலக்காக குறிவைத்து ரஷ்ய படைகள் அதிரடியாக முன்னேறி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்தவ மாணவர் நவீன் நேற்று முன்தினம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கார்கிவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து ‘ஆபரேசன் கங்கா’ என்ற திட்டம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக உக்ரைனின் எல்லை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா வந்தடையும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

உக்ரைனின் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் எல்லை நாடுகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தப் பணியை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களில் சிலர் தென்னிந்திய மாணவர்களை, குறிப்பாக தமிழக மாணவர்களை பேருந்தில் ஏற்றுவதில் பாரபட்சம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இந்திய தூதரக அதிகாரிகள் வட இந்திய மாணவர்களை மீட்பதற்கே முன்னுரிமை அளிப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மாணவர்களை பிரதமர் மோடி இன்று (3.3.2022) சந்தித்து பேசினார். அப்போது, “அதிக அளவிலான இந்திய மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு முந்தைய அரசுகளே காரணம் என குற்றம்சாட்டினார்.

உக்ரைனில் கடும் சிரமங்களை எதிர்கொண்ட பிறகு, தன்மீதுகூட கோபத்தை வெளிப்படுத்திய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்வதாக மோடி தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற நெருக்கடியில் அவர்கள் கோபப்படுவது இயற்கையானது. அவர்கள் கஷ்டங்களையும் குளிரையும் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் ஆத்திரப்படாமல் மீட்பு நடவடிக்கையை புரிந்து கொள்ளத் தொடங்கும்போது, அவர்கள் தங்கள் அன்பையும் காட்டுவார்கள். பல மாணவர்கள் எனக்கு நன்றி தெரிவித்ததோடு, நம்பிக்கை இழந்த நிலையில் அவர்களை மீட்டதற்காக அரசாங்கத்தைப் பாராட்டினர்.

மருத்துவக் கல்வி கொள்கைகள் முன்பு சரியாக இருந்திருந்தால், நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டியதில்லை. எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் இவ்வளவு இளம் வயதில் வெளிநாடு சென்று படிப்பதை விரும்ப மாட்டார்கள். கடந்த கால தவறுகளை சரி செய்ய எங்கள் அரசு பணியாற்றி வருகிறது.

இதற்கு முன்பு 300 முதல் 400 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது கிட்டத்தட்ட 700 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 80 முதல் 90 ஆயிரமாக இருந்த மருத்துவ படிப்பு இடங்கள் 1.5 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும். இதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த 70 ஆண்டுகளில் இருந்ததை விட, வரும் 10 ஆண்டுகளில் அதிக மருத்துவர்கள் உருவாக்கப்படுவார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.