டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, இந்தியாவில் தற்போது வரை 56 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் காஷ்மீர், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளாவிலும் அதிக பாதிப்பு காணப்படுகிறது. தமிழகம், ஹைதராபாத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மாநிலங்களில் கேரளாவில் மேலும் 6 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் மூன்று வயது குழந்தை உட்பட பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12ஐ எட்டியுள்ளது. கிட்டத்தட்ட கேரள மாநிலத்தில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்படுகின்றன. கேரளா தற்போது சீனாவின் வூகான் மாகாணம் போல மாறி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் உள்ள  மதரஸாக்கள், அங்கன்வாடிகள், உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூடப்படும். 7ம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள். பிற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

திருவிழாக்களை ஒத்திவைக்க மத அமைப்புகள் கோரப்படும். வழிபடும் இடங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமணங்கள் குறைந்த அளவுக்கான விருந்தினர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 6 நோயாளிகளுக்கு, கரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, கொச்சியில் இன்று மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கூட்டம் சேரும்போது அதிலிருந்து வைரஸ் கிருமி பரவி விடக்கூடும் என்பதால் கேரளாவிலுள்ள அனைத்து திரையரங்குகளையும், மார்ச் 31ம் தேதிவரை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பிடியில் சிக்கி இதுவரை சர்வதேச அளவில் 4000 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று மனித உடலுக்குள் எந்த மாதிரியான மாற்றத்தை விளைவிக்கிறது என்பது குறித்து சீனாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், “கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பின்பு காய்ச்சல், வரட்டு இருமல், சோர்வு உள்ளிட்ட மிதமான அறிகுறிகளை ஏற்படுகிறது. ஆனால், வைரஸ் தொற்றானது மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும் போது மட்டுமே அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, கீழ் சுவாசக்குழாயை தாக்கும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வறிக்கையில், கடுமையாக, மிக மோசமாக பாதிக்கப்படுபவர்களின் நுறையீரலை இந்த வைரஸ் சேதப்படுத்துவதால், அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், நிமிடத்திற்கு 30க்கும் மேற்பட்ட முறை அவர்கள் வேகமாக சுவாசிக்கின்றனர். அத்துடன், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் குறைந்து போகிறது. ஒருவேளை நுரையீரலில் பாதிக்கும் மேல் இந்த வைரஸ் தொற்று பரவி இருந்தால், இதன் ஆக்ஸிஜன் பரிமாறும் திறன் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதன் மூலம், இதயம், மூளை, சிறுநீரகம் என மற்ற உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது” என கூறப்பட்டுள்ளது.