காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு, மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலமாக என்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிட முடியாது என கிரெட்டா பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த உரிமைப் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் வருடங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களை முழுமையாக மத்திய அரசு திரும்பப்பெறும் வரை, போராட்டம் தீவிரமடையும் எனக் கூறி, லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரிலும், பனியிலும் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகள் சபை, கனடா பிரதமர் உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் பிரபல அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறை கிரெட்டாவுக்கு எதிராக “குற்றவியல் சதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்” சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து கிரேட்டா தன்பெர்க் கூறுகையில், “விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு நான் உறுதுணையாக நிற்கிறேன். மனித உரிமை மீறல்கள் மற்றும், அச்சுறுத்தல்கள் மூலமாக என்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிட முடியாது” என பாஜக அரசின் டெல்லி காவல்துறைக்கு கிரெட்டா பதிலடி கொடுத்துள்ளார்.

 

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கும் உலக பிரபலங்கள்; கலக்கத்தில் மோடி அரசு