நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதை விட முன்னாள் பிரதமர் நேரு மீது குற்றம் சுமத்துவதில் மோடி அரசு அதிக ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பஞ்சாப்பில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதலமைச்சராக உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாநிலத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப்பில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் போராடி வருகிறது. இதனால் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜேபிநட்டா, ஒன்றிய அமைச்சர்கள் பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி சார்பில் அதன் தலைவர் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய மன்மோகன் சிங், “ஒருபுறம் மக்கள் பணவீக்கத்தாலும், வேலைவாய்ப்பின்மையாலும் அவதிப்படுகின்றனர்.

மற்றொருபுறம் 7 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மோடி அரசு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதை விடுத்து, எல்லா பிரச்சினைகளுக்கும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே காரணம் என்று கூறுகிறது.

பிரதமரின் பதவிக்கென தனிச்சிறப்பான முக்கியத்துவம் இருக்கிறது. பிரதமர் என்பவர் அவரின் கண்ணியத்தை உணர்ந்து நடக்க வேண்டும். வரலாற்றில் பிழை கண்டுபிடித்து பழி போடுவதை நிறுத்த வேண்டும். நான் எப்போதும் இந்த தேசத்தின் கவுரவத்தை எங்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார கொள்கை பற்றி புரிதல் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் அரசு தோல்வியடைந்துவிட்டது. சீனா நமது எல்லையில் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாமல் அந்தச் செய்தியைக் கட்டுப்படுத்துகிறது.

வெளியுறவுக் கொள்கையை பிற நாட்டுத் தலைவர்களை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிப்பதாலும், பிரியாணி சமைத்துக் கொடுப்பதாலும், ஊஞ்சலில் ஒன்றாக ஆடுவதாலும் மட்டும் கட்டமைக்க முடியாது. பாஜகவினர் போலி தேசியவாதிகள். இந்த அரசு பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது.

நாங்கள் எப்போதும் நாட்டைப் பிரித்ததில்லை. உண்மையை மறைக்க முயன்றதில்லை. நாட்டின் மாண்பையோ அல்லது பிரதமரின் பதவிக்கான கண்ணியத்தையோ குறைவாக எண்ணியதில்லை. ஆனால் இன்று மக்கள் பிரிக்கப்படுகிறார்கள்.

இந்த அரசாங்கத்தில் போலி தேசியவாதம் வெறும் கூடு. ஆனால் மிகவும் ஆபத்தானது. இது பிரிட்டிஷ் நாட்டவர் பின்பற்றிய பிரித்தாளும் கொள்கைக்கு சமமானது. இந்த ஆட்சியின் அரசியல் சாசன அமைப்புகள் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரக் கொள்கைகளில் சுயநலமும், பேராசையும் தான் மிகுந்து நிற்கிறது. பாஜக, என்னை எப்போதுமே வலுவற்றவன், மவுனி, ஊழல்வாதி என்று விமர்சித்தது. ஆனால், இன்று பாஜக, அதன் பி, சி டீம்கள் எல்லாம் நாட்டு மக்கள் முன்னால் சுயரூபம் தென்பட அம்பலமாகி நிற்கிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி.

சில நாட்களுக்கு முன்னர் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியையும் பஞ்சாப் மக்களையும் பிரதமர் மோடி அவமதித்தார். விவசாயிகளின் போராட்டத்தின் போதும் பஞ்சாப் அவமதிக்கப்பட்டது.

ஆனால், இந்த உலகம் எப்போதுமே பஞ்சாபிகளை அவர்களின் துணிச்சல், தேசப்பற்று, தியாகத்தால் மட்டுமே அறிகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு மட்டும் இவை கண்களில் தெரியவே தெரியாது. இவையெல்லாம் என் மனதை ஆழமாகக் காயப்படுத்துகிறது” என்று மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மன்மோகன் சிங் பஞ்சாபி மொழியிலேயே பேசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பஞ்சாபில் வைரலாகி வருகிறது.