அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு திமுக

பழனிசாமியும், பன்னீரும் காரசார நேரடி மோதலால் அதிமுகவில் சலசலப்பு

தமிழக சட்டசபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் காரசார நேரடி மோதலில் ஈடுபட்டதால், எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்யாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று (மே 07) பொறுப்பேற்றுக் கொண்டார்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவுசெய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தனர். 66 அதிமுக எம்எல்ஏக்களில் 63 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா காரணமாக 3 பேர் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்ததால் கூட்டத்தில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பேசும்போது, இபிஎஸ் முதல்வராக இருந்துவிட்டார். அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார்.

இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் இபிஎஸ் ஆசைப்பட கூடாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் ஓபிஎஸ் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜ் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பேசி உள்ளனர்.

அதோடு ஜெயலலிதா இருந்த போது கட்சியில் நான் தான் நம்பர் 2. சட்டசபையிலும் நான் தான் நம்பர் 2. இதனால் இப்போது நான் தான் எதிர்கட்சித் தலைவர் என்று ஓபிஎஸ் உறுதியாக தெரிவித்துள்ளாராம். ஆனால் இதை இபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக வென்ற 63 தொகுதிகளில் பல இபிஎஸ் முகத்திற்காக விழுந்த தொகுதிகள். அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதால், இப்போது அவர்தான் எதிர்க்கட்சி தலைவர், கொங்கில் அதிமுக அதிக இடம் வென்றதால்தான் 66 இடங்களாவது நமக்கு கிடைத்தது என்று இபிஎஸ் தரப்பு வாதம் வைத்திருக்கிறது.

இதனையடுத்து பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், வன்னியர் இடஒதுக்கீடு போன்ற இபிஎஸ் செய்த தவறான முடிவுதான் தெற்கில் நாம் தோல்வி அடைய காரணம். அதனால் அவரை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது.

இதில் சில அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும். அவர்தான் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யாமல் கூட்டம் வரும் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி அக்கட்சியின் உறுப்பினர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம்,

மனுவுக்கு ஜூலை 7ஆம் தேதிக்குள் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4வது நாளாக எகிறும் பெட்ரோல், டீசல் விலை; சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹93.15, டீசல் ₹86.65

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.