பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை எனக் கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளனை நீங்களே விடுதலை செய்கிறீர்களா அல்லது நீதிமன்றம் செய்யட்டுமா எனக் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், “ஆளுநர் இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, எத்தனை முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது? அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்றால், இது அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மையை சிதைத்துவிடும் என்றனர்.

மேலும், பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஒன்றிய அரசு தன் நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறி வழக்கு விசாரணையை மே 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நேற்று (4.5.2022) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லி வருகிறார் என்று பேரறிவாளன் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, “பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உள்ளார்,” என்று ஒன்றிய அரசு வழக்கறிஞர் நட்ராஜ் தெரிவித்தார்.

விசாரணையில் அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?., பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை ஒன்றிய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, பேரறிவாளனை நீங்களே விடுதலை செய்கிறீர்களா அல்லது நீதிமன்றம் செய்யட்டுமா என்று காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் ஒன்றிய அரசின் முடிவைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.