உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பேரறிவாளன் இன்று (15.3.2022) ஜாமீனில் வெளிவந்த நிலையில், முழுமையான விடுதலை கிடைக்கும் வரை அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பேரறிவாளன் (வயது 52). இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுநீரக தொற்று, மூட்டு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் மனு அளித்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பேரறிவாளன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததால் பேரறிவாளனுக்கு 9 முறை பரோல் நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு கடந்த 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, காவல்துறையினர் அவரை புழல் சிறைக்கு கடந்த மார்ச் 11 ஆம் தேதி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று (15.3.2022) பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். பேரறிவாளன் வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் அற்புதம்மாள், “நீதிக்கான 30 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில், மிகவும் முக்கியமான காலகட்டம் இது.

விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில், கிடைத்திருக்கின்ற இந்தப் பிணை ஓர் இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனது மகன் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக விடுதலை பெறும்வரை, உங்கள் அனைவரது ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு, எங்கள் போராட்டம் தொடர்கிறது. இதுவரை காலமும் எங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நின்று வரும் தமிழக முதல்வர், தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து அமைப்பினருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

என்னுள் நினைவுகளாக உறைந்துவிட்ட அன்பு மகள் செங்கொடியை நெஞ்சிலேந்தி, இத்தனை ஆண்டுகளாக எனது மகனின் உண்மை நிலை உணர்ந்து ஆதரவளித்து வரும் ஊடக நண்பர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

முழுமையான விடுதலை கிடைத்து, அதற்கான சூழல் ஏற்படும் நாளில், விடுதலைக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக நானும், எனது மகனும் காத்திருக்கிறோம். எனவே தற்போது தற்காலிகமாக கிடைத்துள்ள இந்த இடைக்கால பிணையின் போது, அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.