இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம், பங்குச்சந்தை முறைகேடு செய்ததாக தொழில் அதிபர் முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது.

செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1% பங்குகளை, பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகே‌‌ஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்இஎஸ் நிறுவனம், நவிமும்பை எஸ்இஎஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு அபராதம் விதித்து உள்ளது.

இதன்படி ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடியும், முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடியும், நவிமும்பை எஸ்இஎஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடியும், மும்பை எஸ்இஎஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இந்திய பங்குசந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக முகே‌‌ஷ் அம்பானி நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர் வீழ்ச்சியின் காரணமாக முகேஷ் அம்பானி டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி