கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் ஆசிரியருமான கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புனே செல்வதற்காக இன்று காலை 7 மணியளவில் சென்னை விமானநிலையம் வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் கைது செய்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கோபால், காலை 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது ஆளுநரின் தனிச்செயலாளர் அளித்த புகாரின் பேரில் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநரின் தனிச்செயலாளரின் புகாரை அடுத்து ஜாம்பஜார் காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

கோபாலை தொடர்ந்து நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநரின் தனிச்செயலாளர் புகாரைத் தொடர்ந்து முதன்மை ஆசிரியர் தாமோதரன் பிரகாஷ், பொறுப்பு ஆசிரியர் லெனின், தலைமை செய்தியாளர் இளையச்செல்வத்தையும் போலீஸார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தீடிர் கைது அரசியல் வட்டாரத்தில் பபரப்பை கூட்டியுள்லது.நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்ததற்கும், வழக்கறிஞரை பார்க்க அனுமதிக்கக்கோரியும் பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், மதிமுகவினர் என 20-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சிந்தாதிரிபேட்டை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பத்திரிகையாளர், மதிமுக தொண்டர்கள் போராட்டத்தால் சிந்தாரிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்
” பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான தொடர் ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அரசும், மாண்புமிகு தமிழக ஆளுநரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அ.தி.மு.க ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்குப் புறம்பாக முட்டுக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநர் அவர்களும் “பொம்மை” எடப்பாடி திரு பழனிசாமி அரசைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.பேராசிரியை நிர்மலா தேவி விஷயத்தில் நடப்பது எல்லாமே மர்மமாக இருக்கிறது என்று நாட்டுமக்கள் உணர்கிறார்கள். அவர் புகார் தெரிவித்தவுடன் ஆளுநரே தன்னிச்சையாக ஒரு கமிட்டியை நியமித்தார். சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், ஆளுநர் நியமித்த ஒருநபர் கமிட்டியும் விசாரித்தது. வழக்கத்திற்கு மாறாக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஜாமின் கொடுக்கக்கூடாது என்று அ.தி.மு.க அரசு தரப்பே தொடர்ந்து வாதாடி வருகிறது” என ஸ்டாலின் கூறியுள்ளார்

பத்திரிக்கையாளர் சங்கம்
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து பத்திரிக்கையாளர் சங்கங்களும் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளனர். மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே சிந்தாதிரிபேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகம் எதிரே நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைதுக்கு காரணமான கட்டுரை