தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து கேவி ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு பொருத்தமான தலைப்பு வைக்கப்படாததால் சூர்யா 37 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால், சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, அட்டல் ஷர்மா, மனோஜ் ஆனந்த் என பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். என்.ஜி.கே படத்தை பொங்கலுக்கும், கேவி ஆனந்த் படத்தை கோடை விடுமுறையிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இயக்குனர் கேவி ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருவதால் படப்பிடிப்பு காட்சிகள், படத்தின் கதை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில், மோகன்லால் பிரதமராக நடிப்பதும், அவருக்கு பாதுகாவலராக சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நொய்டாவில் படப்பிடிப்பு இடைவெளியில் தேசிய பாதுகாப்புப் படை முக்கிய அதிகாரிகளான பிரிகேடியர் கௌதம் கங்குலி மற்றும் டிஐஜி ஷாலின் ஐபிஎஸ் ஆகியோரை சந்தித்திருந்தார் சூர்யா. அவர்களுடைய சந்திப்பு தன் வாழ்நாளில் மறக்க முடியாதது எனவும் ட்வீட் பதிவிட்டிருந்தார்.

சூர்யா நடிப்பில் உருவான தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவனின் என்ஜிகே மற்றும் கேவி ஆனந்த் ஆகிய படங்கள் அனைத்தும் அரசியல் பின்னணியை மையமாக கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.