நாகையில் கோயிலில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து கொண்டே செல்கின்றன. ஜம்மு காஷ்மீரில் கோயிலில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை, உத்தரபிரதேச மாநிலத்திலும் கோயில் அர்ச்சகர் உள்பட மூவரால், பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன.

இந்நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகைப்பட்டினம் மாவட்டம் நாகை தோப்பு வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேதையன். இவரது மனைவி சந்திரா (வயது 40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேதையன் இறந்து விட்டார்.

இதனையடுத்து சந்திரா கொத்தனார் கையாள், சித்தாள் உள்ளிட்ட கிடைக்கும் கூலி வேலை பார்த்து தன் 2 மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். வழக்கமாக ஆண் துணை இல்லாத காரணத்தால் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் தனது மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம்.

நேற்று இரவு வெளிப்பாளையம் காமராஜர் சாலையில் உள்ள சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்ராஜ் (25), ஆனந்த் (26) இரண்டு பேரும் சந்திராவை பின்தொடர்ந்து சென்று, சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்.

இரவு நேரம் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோயில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். அவர்கள் 2 பேரும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.

பின்னர் அப்பெண்ணை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்து சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் இருவரும் பிள்ளையார் கோயில் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகைப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சந்திரா வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்பட மாதர் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.