உத்தரப்பிரதேசத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண்ணை, கோவில் அர்ச்சகர் மற்றும் அவரது சீடர்கள் 2 பேர், கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்து, அந்தரங்க உறுப்புகளை சிதைத்து கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் படானை சேர்ந்த 50 வயது பெண், தினமும் மாலையில் கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அவர் மாலை 5 மணியளவில் சாமி கும்பிடச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து இரவு 11.30 மணியளவில் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரது சீடர்கள், உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பெண்ணை, துணியில் சுற்றியவாறு, வீட்டில் சேர்த்துள்ளனர். அந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து விட்டதாகவும், தாங்கள் காப்பாற்றியதாகவும் கூறியுள்ளனர்.

அந்த பெண்ணை, அவரது கணவரும், மகனும் சேர்ந்து காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, அந்த பெண் சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். அதற்கு முன், அந்த பெண் தனது கணவர் மற்றும் மகனிடம் சில உண்மைகளை சொன்னதாக கூறப்படுகிறது.

இதனிடையே இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த காவல்துறை, தாமதித்துள்ளனர். உறவினர்களின் போராட்டத்தை தொடர்ந்து, அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையை தொடர்ந்தும், அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், பலாத்காரம் செய்யப்பட்டது தெரியக் கூடாது என்பதற்காக, பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை கடுமையாக சிதைத்துள்ளனர். மேலும் உடலில் பல எலும்புகள் உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. நுரையீரல் குத்தி கிழிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை, மற்றும் கூட்டு பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், 19 வயது தலித் இளம்பெண்ணை, தாக்கூர் சாதியை சேர்ந்த 4 இளைஞர்கள், கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் முதுகு எழும்பை உடைத்து, நாக்கைத் துண்டித்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தால், உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்ற அச்சத்தில், காவல்துறையினரே அந்த பெண்ணின் உடலை எரித்தனர். இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது, படானில் கோவிலில் வைத்தே 50 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து, இதுபோன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது, அம்மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ளதாக பெண்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலியல் வழக்கில் கைதாகிய அதிமுக நிர்வாகி மற்றும் அதிமுக அமைச்சரை சுற்றி சுழலும் சர்ச்சை