வருமான வரி தினமான இன்று, தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது முதல் நிதி உறுப்பினராக பதவி வகித்தவர் ஜேம்ஸ் வில்சன். இவர் வருமான வரியை இந்தியாவில் அறிமுகம் செய்தார். வருமான வரி முதன்முதலில் 1860 ஆம் ஆண்டு வரியாக விதிக்கப்பட்டது, அதே ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி I-T விதிக்கும் அதிகாரம் நடைமுறைக்கு வந்தது.

இதனால் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் தேதி ஆண்டுதோறும் வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்நிலையில் வருமான வரித்துறையின் 162வது வருமான வரி தினம் இன்று (24.07.2022) கொண்டாடப்பட்டது. சென்னை டிடிகே சாலையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் அதிக வருமான வரி செலுத்தியவர்கள் வருமான வரித்துறையால் கவுரவிக்கப்பட்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வருமான வரி செலுத்தியதற்காக விருது வழங்கப்பட்டது.

ரஜினிகாந்தின் சார்பாக அவரது இளைய மகள் சௌந்தர்யாவிடம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை, “ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல; Super Tax Payer என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட ஆளுநர், வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்க உள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க உள்ளது.

ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.150 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் உள்ளார். இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.