தூத்துக்குடி சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவம் போன்று தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினர் அடித்து சித்ரவதை செய்ததால் 25 வயது இளைஞர் மரணித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன் (25 வயத). குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்சனை சம்பந்தமான புகாரின் பேரில் கடந்த மே 8ம் தேதியன்று காவல் துறையினரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் அடித்து எச்சரித்து அனுப்பி விட்டார்.

பின்னர் மீண்டும் மே 10ம் தேதியன்று விசாரணைக்கு அழைத்ததால் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்துக்கு குமரேசன் சென்றுள்ளார். அங்கு, குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் குமார் இணைந்து மிகக்கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும், சொன்னால் பொய் கேஸ் போடுவோம். உன் அப்பனையும் அடிப்போம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன குமரேசன் சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை.

இதனையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதியன்று குமரேசன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ரத்த வாந்தி எடுத்ததால் சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 12ம் தேதியன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் வாசிக்க: இந்திய அளவில் முதலிடம் பிடித்த ’JusticeForJeyarajAndFenix’

மருத்துவமனையில் மருத்துவர் கேட்ட பிறகே குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகளை குமரேசன் கூறியுள்ளார். பரிசோதித்த மருத்துவர் கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குமரேசனின் தந்தையிடம் கூறியுள்ளார். இதன் பேரில் தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 16 நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் ஜூன்.27 மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குமரேசன் இறப்பிற்கு காவல்துறை தான் காரணம் எனக் கூறி நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.