கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் இடம்பெற்றுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கேரளா சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி 18 நாட்களுக்குப் பின்னர் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சரவை இன்று (மே 20) பதவியேற்றார். இந்நிலையில் சிபிஎம் கட்சி சார்பாக பதவி ஏற்ற அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

பினராயி விஜயன் அமைச்சரவையில் சிபிஎம் கட்சியின் பேராசிரியர் ஆ.பிந்து, சிபிஐ கட்சியின் சின்சு ராணி மற்றும் பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் ஆகிய 3 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது கேரளா அரசியலிலும், தேசிய அளவிலும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் ஷைலஜாவின் இடத்தில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக பெண் பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் எம்எல்ஏ தேர்வாகி உள்ளார். அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவரான வீணா ஜார்ஜின் தாயார் ரோசம்மா, நகராட்சி கவுன்சிலராகப் பணியாற்றியவர். மாணவர் பருவத்தில் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ-ல் தீவிரமாக பணியாற்றினார் வீணா.

இயற்பியல் பட்டதாரியான வீணா, படிப்பு முடித்ததும் பத்தினம்திட்டா கத்தோலிக்க கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இதனையடுத்து பத்திரிகை துறைக்குள் நுழைந்தார் வீணா ஜார்ஜ். 2012 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கவரேஜ்-க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 இந்திய பத்திரிகையாளர்களில் வீணா ஜார்ஜும் ஒருவர்.

மலையாள டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விவாதங்களின் நெறியாளர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி கொண்டிருந்தார் வீணா ஜார்ஜ். பத்திரிகை துறை பணிகளுக்காக பல்வேறு சர்வதேச விருதுகளையும் வீணா ஜார்ஜ் வென்றிருக்கிறார்.

பத்திரிகை துறையில் இருந்து கொண்டே மீண்டும் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார் வீணா ஜார்ஜ். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரண்முல்லா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வீணா, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை 7,642 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2வது முறையாக இந்த முறையும் ஆரண்முல்லா தொகுதியில் போட்டியிட்டு 19,003 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

பினராயி விஜயனின் கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜாவும் ஒரு ஆசிரியர்தான். நாட்டில் கேரளாவில் தான் முதன் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவின் பிடியில் இருந்து கேரளாவை மீட்கும் பணியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஷைலஜாவின் பங்கு தேசிய அளவில் பெரும் பாராட்டைப் பெற்றது.

சிபிஎம் கட்சி விதிகளின் படி 2வது முறையாக ஷைலஜாவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை தாம் ஏற்பதாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.

சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்டவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: பாஜக அரசின் அவலம்