இன்று ஒரே நாளில் அந்தமான் நிகோபார், மணிப்பூர் ஆகிய இரண்டு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில், அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் அருகே காலை 8.56 மணிக்கு சுமார் 45 கிலோமீட்டர் ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதாக மணிப்பூர் மாநிலம் உக்ருல் அருகே காலை 11.24 மணிக்கு சுமார் 60 கிலோமீட்டர் ஆழத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று ஹரியானா மாநிலத்திலுள்ள ரோஹ்தாக், ஜம்மூ காஷ்மீரில் உள்ள ஹன்லே ஆகிய இரண்டு இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தலைநகர் டெல்லியில் 16க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை லேசான நிலநடுக்கங்கள் மட்டுமே. ஆனால் இதுபோன்ற தொடர் நிலநடுக்கங்களால் டெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க: வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் அவசர ஆலோசனையில் டெல்லி அரசு..

இதுகுறித்து, நில அதிர்வு ஆய்வாளர்கள் கூறும்போது, லேசான நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்படுவதால் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என அர்த்தமில்லை. எனினும், நில அதிர்வுகளை தொடர்ந்து கண்காணித்து தயார் நிலையில் இருப்பது அவசியம் என எச்சரித்துள்ளனர். மேலும் மற்ற இயற்கை பேரிடர்களை போல நில நடுக்கத்தை துல்லியமாக கணித்துவிட முடியாது.

வழக்கமாக, மத்திய ஆசியா, இமாலய மலைத்தொடர்களில் நிலநடுக்கம் ஏற்படும்போது அதன் அதிர்வுகள் டெல்லியில் உணரப்படுவது வழக்கம். இதுவும் டெல்லியில் ஏராளமான நில அதிர்வுகள் பதிவு செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடும் என நில அதிர்வு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.