கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு வெளியிட்டதையடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழக பிரிவு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிப்புடைய ஒருவரிடம் மருத்துவர் ஆலோசனை கட்டணத்தை தவிர்த்து நாள் ஒன்றுக்கு 23,182 ரூபாய் கட்டணம் வசூல் செய்யலாம் எனவும் மருந்து, படுக்கை கட்டணம், அறை வாடகை என அனைத்தும் சேர்த்து 10 நாட்களுக்கு 2, 31,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியின் அதிரடி முடிவு; ஆதார் கட்டாயம்

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களிடம் நாள் ஒன்றுக்கு 43,141 ரூபாயும், 17 நாட்களுக்கு 4,31,000 ரூபாயும் வசூல் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக நாள் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம் எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

இருப்பினும் ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கொரானா தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலகின் பல நாடுகளும் திணறி வரும் நிலையில், நோய் கட்டுப்படுத்தும் சிகிச்சைக்காக இவ்வளவு அதிகமான தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை கட்டணமாக தமிழக அதிமுக அரசு அறிவித்துள்ளதற்கு பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.