சந்தேகத்திற்குரியவர்களை தீபாவளி பட்டாசை அடிப்படையாக கொண்டு பயங்கரவாதிகள் என்றழைக்காதீர் என மெகபூபா முப்தி மத்திய அரசை கண்டித்து உள்ளார்.
 
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டு வைக்க திட்டமிட்டதாக கூறி ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பான புகைப்படத்தில் தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசுக்களும் இடம்பெற்றிருந்தது.
 
இந்நிலையில் இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, “தேசிய பாதுகாப்பு முதன்மையானது.
 
ஆனால் தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசை அடிப்படையாக கொண்டு சந்தேகத்திற்குரியவர்களை பயங்கரவாதிகள் என்றும், அவர்களுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்பது விசாரணைக்கு முன்னதாக கூறுவது அடிப்படையற்றது.
 
இது அவர்களுடைய வாழ்க்கை மற்றும் குடும்பத்தை அழித்துவிட்டது. முந்தைய சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தெரியவந்ததிலிருந்து தேசிய புலனாய்வு பிரிவு கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் தெரிவித்த விவரம் நகர்ப்புற நக்சலைட்கள் என்ற குற்றச்சாட்டு வீழ்ச்சியடைந்ததை அடுத்து தேர்தல் நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவால் கைது நடவடிக்கை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவமானது, ஒருங்கிணைந்தது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் சந்தேகப்படுவது கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார் மெகபூபா முப்தி.