ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல் தொடர்பு சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் இன்று மாலை 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த மாதம் 7 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-49, ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீன ரக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்நிலையில், பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-01 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2 ஆம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளை தாங்கிய பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இது இந்தியாவின் 52-வது பிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரலையில் ராக்கெட் செலுத்தப்படுவதை காணலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்நிகழ்வை நேரடியாக காண அனுமதி மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடங்கியது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுன்ட்-டவுன்