பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2. இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில், தனுஷூடன் இணைந்து சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா, வினோத், டோவினோ தாமஸ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் தனுஷ் பேசுகையில், வரலட்சுமியுடன் நடிக்க கஷ்டமாக இருந்தது. படத்தில், ஒரு வசனம் சொல்கிறார் என்றால், நாம் அதற்கு பதில் யோசிப்பதற்கு முன்பே அதனை சொல்லி முடித்துவிடுவார். படத்தில் வரலட்சுமியின் நடிப்பே வேற மாதிரி இருக்கும்.

படப்பிடிப்பு தளத்தில் வினோத் மற்றும் ரோபோ சங்கர் இருவருமே இல்லை என்றால், படப்பிடிப்பு ரொம்பவே போரடிக்கும். இருவருமே இருந்தால், புத்துணர்ச்சி கிடைக்கும். மாரி 2 படத்தில் நடிக்க கேட்கும் போது ரோபோ ஷங்கர் கால்ஷீட் கொடுக்க முடியாதபடி பிசியாக இருந்தார். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

நடிகர் ரோபோ ஷங்கர் பேசும்போது, மாரி 2 படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் அவ்வளவு ஸ்பேஸ் கொடுத்த தனுஷ் சாரை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். சாய் பல்லவி பொம்பள தல. டைட்டில் கார்டிலேயே போடச் சொல்லியாச்சு. தமிழ் திரையுலக ஹீரோயின்களிலேயே பொம்பள தல சாய் பல்லவி தான்.

மாரி 2 மூலம் சாய் பல்லவியின் வேறு ஒரு முகத்தை பார்க்கப் போகிறோம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. ராஜா சார் பாடிய பாடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். தனுஷ் சாருக்கும் அது தான் பிடித்துள்ளது. எனக்கு எப்படி மாரி படம் பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதே போன்று மாரி 2 படம் மூலம் வினோத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும். சாருக்கு தங்கமான மனுசு அதனால் படம் ரிலீஸான ஒரு வாரத்தில் அனைவருக்கும் 5 பவுனில் தங்கம் அளிப்பார் என்று ரோபோ ஷங்கர் குறிப்பிட்டார்.