இசைஞானி இளையராஜா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

சென்னை ஐஐடி.யில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தான் இசையமைத்த பாடல்களை ஒரே நேரத்தில் இளையராஜா பாடினார். இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, “நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது.

இசையமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார்.

மேலும், இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா.. என்று மாணவர்கள் கேட்ட போது, என்னுடைய வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதி வருகிறேன். விரைவில் வெளியாகும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன். மூன்றே நாட்களில் படமாக்கலாம் என்றார்.