பிகார் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் இறந்துகிடந்த தனது தாயை எழுப்ப முயலும் குழந்தை தொடர்பான வீடியோ கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, நடிகர் ஷாருக்கான் அக்குழந்தைக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , கடந்த இரு மாதங்களாக ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பி கொண்டிருக்கும் நிலையில், பசி, பட்டினியால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

கடந்த வாரம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் புலம்பெயர் தொழிலாளியான பெண் கடும் வெப்பம் மற்றும் பசியால் இறந்தார். தாய் இறந்ததுகூடத் தெரியாமல் சடலத்துடன் அவரின் ஒன்றரை வயதுக்குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

மேலும் வாசிக்க: உணவு தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த தாய்; சடலத்துடன் விளையாடிய குழந்தை- புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகளை படம்பிடித்து காட்டும் காட்சியாக இது அமைந்திருந்தது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் அந்த குழந்தைக்கு தேவையான நிதியுதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பதிவில், “அந்த குழந்தைகாக எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் நன்றி. பெற்றோரை இழந்த குழந்தைக்கு அனைத்து மனவலிமையும் கிடைக்க நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அக்குழந்தையின் வேதனையை உணர முடிகிறது. நம்முடைய அன்பும், ஆதரவும் குழந்தை உடன் இருக்கும்” என பதிவிட்டிருந்தார்.

ஷாருக்கானின் மீர் அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவியர்களுக்கு நன்றி. தாயை இழந்த குழந்தை, அவரை எழுப்ப முயற்சித்த அந்த வீடியோ அனைவரையும் வேதனைப்படுத்தியது. இப்போது அந்த குழந்தை அவரி்ன் தாத்தாவின் ஆதரவில் இருக்கிறது, அந்த குழந்தைக்கு நாங்கள் ஆதரவு வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.