தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா (17 வயது) தற்கொலை செய்து கொண்டார். இதில் மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62 வயது) காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் குற்றம்சாட்டி, இதுதொடர்பாக மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

மேலும் தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவியின் உடலை பெற்று தகனம் செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி முருகானந்தம் அவரது மகளின் உடலைப் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கொண்டுச் சென்று தகனம் செய்தார். மேலும் முருகானந்தம், அவரது மனைவி ஆகியோரிடம் தஞ்சாவூர் 3வது நீதித்துறை நடுவர் பெற்ற ரகசிய வாக்குமூலத்தின் நகல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வழங்கப்பட்டது.

பின்னர், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ பதிவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் உள்ளது மாணவியின் உண்மையான குரல் தானா, வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிபடுத்த வேண்டியதுள்ளது. இதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும்.

அதனை சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு டிஎஸ்பி அனுப்பி வைக்க வேண்டும். தடயவியல் மைய இயக்குனர் செல்போனை ஆய்வு செய்து உண்மைத் தன்மை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். மாணவின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் ஆய்வு மைய அலுவலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி, தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக நடந்து வந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் வழக்கறிஞர் கார்த்திக்கேய வெங்கடாச்சலபதி வாதிடுகையில், “விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். செல்போன், சிடி உள்ளிட்ட பொருட்களை ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும்” என்றார்.

அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், “இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 53 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வாக்குமூலங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகிறது. அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.

மாணவியின் வீடியோ ஜனவரி 17-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 20 ஆம் தேதி வரை மதமாற்றம் தொடர்பான சர்ச்சை எழுவில்லை. மாணவி உயிரிழக்கும் வரை காத்திருந்து அந்த வீடியோவை சமூகவலை தளங்களில் பரப்பியுள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். டிஎஸ்பி நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறார்” என்றார்.

மாணவி படித்த பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் வாதிடுகையில், “எங்கள் பள்ளி 160 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்துக்கள், இஸ்லாமிய மாணவர்கள் அதிகளவு பயில்கின்றனர். எங்கள் பள்ளியில் யாரும் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

தற்கொலை செய்து கொண்ட மாணவி நன்றாக படிக்கக்கூடியவர். அவர் தற்கொலையால் வருந்துகிறோம். அவரது தற்கொலை தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த விசாரணைக்கும் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளது” என்றார்.

இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று (31.1.2022) தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.