தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் தங்கக்கடத்தல் விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்துள்ள புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் சிக்கியுள்ளார்.

முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஸ்வப்னா, சந்தீப் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்து கொச்சி அழைத்து வரப்பட்ட அவர்களிடம் பல மணிநேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் இருவரும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, ஸ்வப்னாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தின் அனுமதியை நாடினர். அதனை விசாரித்த நீதிமன்றம் ஸ்வப்னாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது. மேலும், என்.ஐ.ஏ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: யோகி அரசின் ரகசியத்தை மறைக்கவே திட்டமிட்ட என்கவுண்டர்.. அகிலேஷ் யாதவ்