ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்ந்ததால், வங்கிச் சேவைகள் பரவலாகப் பாதிக்கப்பட்டன.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசு ஊழியர்கள் நேற்றும், இன்றும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒன்றிய அரசு, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. வங்கி பணிகள் மட்டுமின்றி எல்.ஐ.சி., தபால், வருமான வரித்துறை, சுங்கம், கலால், கணக்குத் தணிக்கைத்துறை,

மின்சாரத் துறை, நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைத் தொடர்பு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகளும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள் தொழிலாளர் திட்டங்களுக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டி, சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எம்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன.

நேற்று முதல் நாளில் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து வெகுவாகவே பாதிக்கப்பட்டிருந்தது. 70% அரசுப் பேருந்துகள் நேற்று இயங்கவில்லை. இதனால் மக்கள் தனியார் போக்குவரத்து வாகனங்களை நாடினர்.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஆட்டோ ஒட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இன்று (29.3.2022) இரண்டாவது நாளில் தமிழ்நாட்டில் 89% அரசுப் பேருந்துகள் மற்றும் சென்னையில் 98% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 19290 பேருந்துகளில் 17268 பேருந்துகள் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இன்று பாரத் பந்த் முழுவீச்சில் நடைபெற்றது. வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து வாகனங்களை காவல்துறையினர் பாதுகாப்புடன் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டது.

அதேபோல் கேரளாவின் சில பகுதிகளில் நேற்று அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் தாக்கப்பட்டனர். தனியார் வாகனங்களும் தாக்கப்பட்டன. கேரள அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது.

இந்த உத்தரவு ஆளும் சிபிஐக்கு ஆதரவாக இயங்கும் தொழிற்சங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் கேரளாவில் இன்று அரசு அலுவலகங்களில் ஓரளவு பணியாளர்கள் திரும்பியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் நேற்று பந்த் முழுவீச்சில் நடந்தது. ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்கள் பல இடங்களிலும் நடந்தன. 2வது நாளான இன்றும் அங்கு ஆங்காங்கே மறியல் நடைபெற்றது.

ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலையில் 100க்கணக்கான சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒடிசாவின் புவனேஸ்வர், சம்பல்பூர், பெஹராம்பூர் பகுதிகளில் தொழிற்சாலைகள் முடங்கின. பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.