உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசின் ரகசியத்தை வெளிவராமல் பார்த்துக்கொள்வதற்காக காரை கவிழ்த்துள்ளனர். கார் கவிழவில்லை, அது கவிழ்க்கப்பட்டுள்ளது; என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் தனது கும்பலுடன் சேர்ந்து 8 காவல் துறையினரைக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, ஜூலை. 10ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி போலிஸாரால் கைது செய்யப்பட்டு, உத்தர பிரதேச போலிஸாரிடம் விகாஸ் துபேவை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து உத்திர பிரதேசம் நோக்கி, துபே கார் மூலம் அழைத்துச் செல்லும்போது, தப்பிக்க முயன்றதால் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “விகாஸ் துபே அழைத்துவரப்பட்ட கார் கவிழவில்லை; அது கவிழ்க்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசின் ரகசியத்தை வெளிவராமல் பார்த்துக்கொள்வதற்காக காரை கவிழ்த்துள்ளனர். விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல்” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபே பின்னணி..

இந்நிலையில், உத்தர பிரதேச போலிஸார் கூறும் தகவல்கள் சிலவற்றை மத்திய பிரதேச போலிஸார் மறுத்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துபேவை கைது செய்த மத்திய பிரதேச போலிஸார் அவரை முதலில் உஜ்ஜெய்ன் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது அவர் தப்பிக்க முயற்சி செய்ததாகவும் உத்தர பிரதேச போலிஸார் தெரிவித்துள்ளனர். இதனாலேயே தங்களிடம் இருந்து தப்ப முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உ.பி., காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதை மறுத்துள்ளது மத்திய பிரதேச காவல் துறை. துபேவை காவல் நிலையத்துக்கே அழைத்துச் செல்லவில்லை என்றும், நேரடியாக உத்தர பிரதேச போலிஸிடம் தான் ஒப்படைத்தோம் என்றும், தப்பி ஓட துபே முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போலிஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு தைரியம் கொடுத்த முக்கியப் புள்ளிகளை காக்கவே, என்கவுண்டரில் விகாஸ் துபே கொல்லப்பட்டாரா என்ற சர்ச்சைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.