அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,

ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை (ஜனவரி 06) நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

அதேபோல் ஜனவரி 07 மற்றும் 08 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜனவரி 09 ஆம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே விடாமல் மழை பெய்து வரும் நிலையில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்