கலிஃபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கக்கூடிய எலக்ட்ரானிக் கார் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்துள்ளது.

கலிஃபோர்னியாவை சேர்ந்த புதிய நிறுவனமான ஆப்டெரா மோட்டார்ஸ் நவீன வடிவமைப்பில், குறைந்த எடையில், மூன்று சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வகை கார், தினமும் 64 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க தேவையான சூரிய சக்தியை மாற்றும் திறன் கொண்டது.

கூடுதல் சோலார் பேனல்களை இணைக்கும் பட்சத்தில் மேலும் 38 கிலோ மீட்டர் பயணிக்கக்கூடிய வசதி இந்த காரில் உள்ளது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த கார்கள், இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை 19 லட்சம் ரூபாய்.

பேட்டரி மூலமாகவும் இயங்கும் இந்த எலக்ட்ரானிக் கார், 1609 கிலோ மீட்டர் பயணிக்க தேவையான பேட்டரி வசதி செய்யப்பட்டுள்ளது. இது முன்னணி நிறுவனமான டெஸ்லா அறிமுகம் செய்துள்ள கார்களில் 595 கிலோ மீட்டர் வரைதான் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

110 வோல்ட் கொண்ட சாதாரண சாக்கெட்டுகள் மூலம் இந்த பேட்டரிகளின் சக்தியை 240 கிலோ மீட்டர் பயணிக்கக்கூடிய அளவு ஒரே இரவில் புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

சூரிய சக்தியை கொண்டு 64 கிலோ மீட்டர் தான் பயணிக்க முடியும் என்பது குறைவாக தோன்றினாலும், அலுவலகம் செல்பவர்கள் தங்கள் கார்களை பகலில் சூரிய ஒளிபடும்படி நிறுத்திவைத்தால், மேலும் பயணிக்க தேவையான சக்தியை பெரும் என்று அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதுபோல் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீட் தேர்வில் தொடரும் முறைகேடு; போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி