கன்னியாகுமரி மாவட்டம், மணலோடை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 49). இவர் பில்லி சூனியம், செய்வினை எடுப்பது போன்ற மாந்திரிக பூஜை செய்து வருகிறார். இதனால் இவரைப் பலரும் சந்தித்துச் செல்வது வழக்கம்.

இப்படி மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சேகரை சந்தித்துள்ளார். அப்போது தனது இரண்டு மகள்களுக்கும் உடல் நிலை சரியில்லை. பல மருத்துவர்களை பார்த்தும் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.

அப்போது மந்திரவாதி சேகர், “உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் விடிய விடியப் பூசை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி தொழிலாளியும் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அப்போது மந்திரவாதி தொழிலாளியின் மகளைத் தனியாக அழைத்து, “நான் சொல்வதுபடி நீ கேட்டாள் உனது குடும்பம் நன்றாக இருக்கும்” எனக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் செய்வினை செய்து குடும்பத்தை அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி இது குறித்து எதுவும் பெற்றோர்களிடம் கூறவில்லை. இதனையடுத்து சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமி நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் மந்திரவாதி சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.