தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது யூனுஸ் (37), வைத்திருந்த 6 அட்டை பெட்டிகளை சந்தேகத்தின்பேரில் சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.

அதில், சிகப்பு காது அலங்கார ஆமைகள் (ரெட் இயர் சேலிடர்) 2300 உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமது யூனுசை கைது செய்தனர். பின்னர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள வன உயிரின குற்ற கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சிவப்பு காது அலங்கார ஆமைகளை சோதனையிட்டனர்.

அப்போது, தாய்லாந்து நாட்டில் இருந்து எவ்வித ஆவணமும் இல்லாமல், சட்ட விரோதமாக கடத்தி வந்தது தெரிந்தது. மேலும், இவற்றை கொண்டு வருவதற்கு முன், நோய் கிருமிகள் இருக்கிறதா என விலங்கியல் மருத்துவதுறை ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

“அதேபோல், அந்நாட்டு வன பாதுகாப்பு அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று, சான்றிதழ் பெற வேண்டும். அதுபோன்ற எவ்வித சான்றிதழ்களும், அவரிடம் இல்லை. எனவே, இதை திருப்பி அனுப்புங்கள் என வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று மதியம் 2 மணிக்கு தாய்லாந்து செல்லும் தாய் ஏர்லைன்ஸ் மூலம், சிவப்பு காது அலங்கார ஆமைகளை திருப்பி அனுப்பினர்.

மேலும், ஆமைகளை கடத்தி வந்த முகமதுயூனுசிடம் விசாரித்ததில், இந்த ஆமைகள் தாய்லாந்தில் இந்திய மதிப்பு 10 ஆயிரத்துக்கு வாங்கி வந்து, தமிழகத்தில் உள்ள செல்வந்தர்களுக்கும், நட்டசத்திர ஓட்டல்கள், விடுதிகளுக்கு எண்ணிக்கை கணக்கில் சுமார் 10 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக கூறினார். தொடர்ந்து அதிகாரிகள், முகமதுயூனுஸ் இதற்கு முன் வெளிநாடுகளுக்கு சென்று, இதுபோன்ற வன உயிரினங்களை கடத்தி வந்துள்ளாரா, இவருக்கு உடந்தையாக இருப்பது யார், இப்படி கடத்தி வந்து யாரிடம் கொடுக்கிறார். இவரது பின்னணியில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என தீவிரமாக விசாரிக்கின்றனர்.