இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய்யின் திரைப்படத்தைப் பார்க்காதீர்கள் என்று மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞாச சம்பந்தர் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு மதுக்கடைகள் ஆதிக்கம் இங்கே அதிகரித்துள்ளது.

கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள், ஆதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? திருக்கோயில் சொத்துக்கள் இங்கே தொலைந்து போகிறது. உண்மையில் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரமே திருக்கோயிலுக்குள்தான் உள்ளது. முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை?

திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும். ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்.

இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள். ‘திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன’ என சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அறநிலையத்துறை பொல்லாத துறையாக உள்ளது. அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.

மேலும் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கீ என்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.