சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் கீழடி வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பழைய வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கியப் பகுதி இது. இங்கு மத்திய தொல்லியல் துறை கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் 3 காலகட்டங்களாக விரிவான அகழாய்வு மேற்கொண்டுள்ளது.

பள்ளிசந்தை திடல் என்ற மேடான பகுதியில் நடந்த அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானம், உறைகிணறுகள், சுடுமண் பொம்மைகள், அரிய கல்மணிகள், யானை தந்தத்தினால் ஆன பொருட்கள், பழங்கால காசுகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகள், பலவகை சுடுமண் பாத்திரங்கள் உள்பட பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனிடையே, கீழடியில் தொல்லியல்துறை சார்பாக தொடர்ந்து நான்காம் கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இம்முறை அகழ்வாராய்வில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன எனவும் கண்டறியப்பட்ட பொருட்களின் வயதைக் கண்டுபிடிக்க ஆபரணங்களை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக நேற்று தமிழக அரசின் வழக்குரைஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளார்.

கீழடி நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 15 அடி ஆழத்துக்கும் மேல் தோண்டப்பட்டதில் இதுவரை 7000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தங்க ஆபரணங்கள் உட்பட உலோகம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பலவிதமான பாண்டங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மத்திய தொல்லியல்துறையிடம் தரக்கூடாது என அதிரடியாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் கீழடிக்கு வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அகழாய்வு நடைபெற்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதனை எங்கு தொடங்கலாம் என்பது குறித்தும் மாநில தொல்லியல் துறையினரிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொல்லியல்துறை நடத்திய அகழ்வாராய்விலேயே கீழடிதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நான்காம் கட்ட அகழாய்வில் 6 தங்கப் பொருட்கள் கிடைத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் பற்றிய அறிக்கையை தொல்லியல் துறை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கீழடியில் அகழாய்வு நடத்துவதில் தொய்வில்லை என்றும், கார்பன் டேட்டிங் முறையில் அகழாய்வு பொருட்கள் ஆய்வு செய்யப்படுவதால் அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆவரே காரணமும் தெரிவித்தார்.

மேலும், 17 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி குறித்த அறிக்கை எப்போது வரும் என்ற கேள்விக்கு இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.