மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்று பாஜக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வலதுசாரிகள், பாஜகவினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்த நூல் ஒன்றின் வெளியீட்டு விழா நேற்று (12.10.2021) டெல்லியில் நடந்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “வீர சாவர்க்கர் இந்திய வரலாற்றின் ஒரு சின்னமாக இருந்தார். அவர் அப்படிப்பட்டவராகவே தொடர்வார். அவர் ஒரு சுதந்திரப் போராளி மற்றும் உறுதியான தேசியவாதி. இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் முதல் ராணுவ உத்தியாளர் சாவர்க்கர்.

மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிய சித்தாந்தங்களைப் பின்பற்றுவோர் அவரை ஒரு பாசிஸ்ட் என குற்றம் சாட்டுகிறார்கள். அவரை தாழ்ந்தவராகப் பார்ப்பது நியாயமானது அல்ல. சாவர்க்கர் மீதான வெறுப்பும் நியாயமற்றது. அவர் சுதந்திரத்திற்காக போராடியவர். அவருக்கு பிரிட்டிஷ் ஆட்சி இரண்டு முறை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

ஆனால் சாவர்க்கர் குறித்து தொடர்ச்சியாக பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயேரிடம் பலமுறை மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர் என்று கூறிவருகிறார்கள். ஆனால் மகாத்மா காந்தி தான் அவரை மன்னிப்புக் கடிதங்கள் எழுத சொன்னார்” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக மிகவும் விரிவான கோட்பாடுகளை இந்தியாவுக்கு தந்தவர் சாவர்க்கர் என்றும் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்த சி=பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாவர்க்கரை நியாயப்படுத்தி மகாத்மா காந்தி மீது பழியை போடுவதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சாவர்க்கரின் மன்னிப்புக் கடிதங்கள்:

வி.டி.சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களுக்குப் பெயர்போனவர். விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது போன்ற பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாசார அமைச்சகத்தின் சார்பில் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

ஆனால் வரலாற்றுத் தகவல்களின்படி சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.

1911 ஆம் ஆண்டு அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் 9 ஆண்டுகளில் 5 மன்னிப்பு கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார். 1915இல் தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி இந்தியா திரும்பும் முன்னரே, 1911, 1913, 1914, 1918 மற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் அவை எழுதப்பட்டன. ஆறாவதாக ஒரு மன்னிப்பு கடிதம் அவரது மனைவியால் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதப்பட்டது.

அதில், “ஆங்கில அரசு விரும்பும் எதையும் செய்ய நான் தயார். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கு செல்வேன். தம் மீது கருணை காட்ட வேண்டும். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன்” என குறிப்பிட்டு சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு பலமுறை மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேயே அரசை எதிர்க்காமல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர் தான் சாவர்க்கர் என பலரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.