உலகில் இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வர்த்தகம் உள்பட அனைத்தையும் திறந்து விட்டு இருப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.57 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,57,431 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, பிரேசிலை விட, 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் 70.000த்தை தாண்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியா உள்பட பல நாடுகள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்ற நிலையில், கொரோனா லாக்டவுனால் பலநாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் அந்தோணன் தெரிவித்துள்ள கருத்தில், “கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் நாடுகள் சமூகத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விரைவாகத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. அதேபோல, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் இது பேரழிவுக்கு இட்டுச் செல்லும்.

ஆனால், ஒருபுறம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கை வாழ அனுமதித்துவிட்டு, மறுபுறம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துகிறேன் என்று கூறினால், இரண்டுக்கும் சமநிலையை உண்டாக்க முடியாது.

சமூகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களைச் சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பது, கொரோனா மூலம் வரும் பேரழிவுக்கு வழிகாட்டுவதற்கு இணையாகும்.

அதேபோல், தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வயதானவர்கள், வயதில் குறைந்தவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் ஒவ்வொருவரும் சுயமாகத் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது, பரிசோதனை செய்வது, கவனிப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் 105 நாடுகளில் நடத்திய ஆய்வில் 90% குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள நாடுகள், கொரோனா வைரஸ் காரணமாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், ஊட்டச்சத்து மருந்துகள் அளித்தல் உள்ளிட்ட மற்ற சுகாதாரச் சேவைகளை நிறுத்திவிட்டன.

பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் என்னவிதமான வேறுபாடுகள் கொண்ட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாடுகள் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: விஜய் மல்லையா குற்றவாளி இல்லையென தாக்கல் செய்த சீராய்வு மனு- உச்சநீதிமன்றம் தீர்ப்பு