மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி கிறிஸ்துவ பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய புதுக்கோட்டை மாவட்ட ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கணேஷ் பாபுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சமாதானபுரதில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருக்கும் ராணி, தேவசாந்தி ஆகிய இருவரும் திம்மயம்பட்டியில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஜெபம் செய்வதற்காக சென்றிருக்கிறார்கள்.

இதைக்கண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கணேஷ்பாபு (38) தலைமையிலான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர் அந்த இரண்டு கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, இந்துக்களை மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்களா என்று கூறி அவர்களை தகாத வார்த்தைகள் சொல்லி திட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மற்றும் அவர்களிடமிருந்த செல்பேசியை பறித்துக் கொண்டு அவர்களை திட்டி விரட்டி உள்ளனர். கால்நடையாக இலுப்பூர் வந்த கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள் இருவரும் கிறிஸ்தவ சபையில் நடந்த நிகழ்வு குறித்து விளக்கியுள்ளனர்.

பின்னர் தேவாலய நிர்வாகிகளின் அறிவுறுத்தலின்படி, இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து நேற்று இரவு காவல்துறையினர் கணேஷ் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.