பங்குச் சந்தையில் ரூ.2,800 கோடி மோசடி மற்றும் அன்னியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக கார்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கோமாண்டூர் பார்த்தசாரதி மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) கிருஷ்ணா ஹரி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கார்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஊழியர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தது. விசாரணையில் இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மிகவும் சிக்கலான பரிவர்த்தனை மூலம் மோசடி செய்துள்ளனர்.

மேலும் முதலீட்டாளர் பணத்தை மிகவும் சாதுர்யமாக எடுத்து மோசடி செய்தது, முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகை ரூ. 2,874 கோடியை வேறு பணிகளுக்கு சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் பங்குகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் பெற்று அதன் மூலம் அன்னியச் செலாவணி மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் பங்குகள் கார்வி பங்கு தரகு நிறுவனத்தினுடையது. இவை வங்கிகளில் அடகு வைக்கப்பட்டு கடன் பெறப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வேறு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அளித்த அங்கீகாரத்தை இந்நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தியுள்ளது. இதில் நிறுவனத் தலைமை நிர்வாக இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை போலியாக உருவாக்கப்பட்ட 14 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே கார்வி குழுமத்தால் உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்களாகும். இவை அனைத்துமே பல்வேறு நிதி ஆலோசகர்கள் மூலமாக சட்ட விரோதமாக மாற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர வங்கி அல்லாத பிற நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.400 கோடியை கார்வி குழுமம் கடனாகப் பெற்றுள்ளது. இவை 5 போலி நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக மாற்றம் செய்யப்பட்ட பங்குகளை அடமானம் வைத்து இத்தொகை பெறப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பங்குச் சந்தையில் மோசடி மற்றும் அன்னியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக கார்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கோமாண்டூர் பார்த்தசாரதி மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கிருஷ்ணா ஹரி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி வழக்கில் கைதான பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணா ஹரி ஆகிய இருவரும் தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை மீண்டும் கைது செய்துள்ளது. ஹைதராபாத் காவல் நிலையத்தில் ஹெச்டிஎப்சி வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் அன்னியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.