கோவையில் உயிரிழந்து போலி சான்றிதழ் கொடுத்து உடலை பெற்றுச் சென்று மதுரையில் தகனம் செய்யப்பட்டது இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா தான் என டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா என்று தீவிரமாக தேடப்படும் குற்றவாளியாக வலம் வந்தவர். கழுகு மூலம் போதைப்பொருள் கடத்தும் வழக்கத்தைக் கொண்டவர்.

இலங்கையில் கேங்ஸ்டர் வாரில், காவல்துறை வாகனத்தில் சென்ற எதிரணியினர் ஏழு பேரைக் கொன்றுவிட்டு இந்தியா தப்பிவிட்டார். சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்காவுக்கு, வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

பெங்களூரு, சென்னை, கோவை என்று அங்கொட லொக்கா பல இடங்களிலும் சுற்றியிருக்கிறார். கோவையில் தன் காதலி அமானி தான்ஜியுடன் தங்கியிருந்தவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து பெயர், முகவரி உள்ளிட்ட போலி சான்றிதழ் கொடுத்து கோவையில் பிரேத பரிசோதனை செய்து அங்கொட லொக்காவின் உடலை பெற்றுச்சென்று, மதுரையில் தகனம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இறந்தது அங்கொட லொக்காதான் என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் கொரொனா தொற்று காரணமாக பணிகள் முடங்கியது.

இந்நிலையில் இலங்கை அரசின் உதவியுடன் அங்கொடா லொக்காவின் தாயார் சந்திரிகா பெரேராவின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அங்கொட லொக்காவின் டிஎன்ஏ மாதிரிகளிடன் ஓப்பீடு செய்யப்பட்டதில் இறந்தது அங்கொட லொக்காதான் என்பது உறுதியாகிய உள்ளது.